தென்காசி அருகே பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தென்காசி அருகே வீட்டுக்கு செல்ல மறுத்து பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பள்ளிக்கூட ஆசிரியர் நெல்லை மாவட்டம் தென்காசி– இலஞ்சி ரோட்டில் அரசு உத;
தென்காசி,
தென்காசி அருகே வீட்டுக்கு செல்ல மறுத்து பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
பள்ளிக்கூட ஆசிரியர்நெல்லை மாவட்டம் தென்காசி– இலஞ்சி ரோட்டில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் மாணவ– மாணவிகள் இருபாலரும் படித்து வருகின்றனர். நெல்லை பேட்டையைச் சேர்ந்த ராஜ் என்பவர் தமிழ் ஆசிரியராக கடந்த ஒரு ஆண்டாக தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார்.
இவர், இலஞ்சி கோமதிநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர், பள்ளிக்கூட மாணவர்களுக்கு காலையிலும், மாணவிகளுக்கு மாலையிலும் தனது வீட்டில் வைத்து டியூசன் சொல்லி கொடுத்துள்ளார். மாலையில் மாணவிகளுக்கு டியூசன் சொல்லி கொடுக்கும் போது இரட்டை அர்த்தத்தில் பேசியதாக தெரிகிறது. மேலும் சில மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதுடன் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியரிடம் புகார்இதுதொடர்பாக மாணவிகள், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஆறுமுகத்திடம் புகார் கூறியுள்ளனர். அவர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கண்டிப்பதாக கூறினாராம். ஆனாலும் மாணவிகள் புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடம் விட்ட பிறகும் மாணவ– மாணவிகள் யாரும் வீட்டுக்கு செல்லவில்லை. பள்ளிக்கூட வளாகத்திலேயே தரையில் அமர்ந்து வீட்டுக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கூட வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைதகவல் அறிந்த குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, வருவாய் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிக்கூட வளாகத்துக்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இரவு 10 மணி வரை நடந்தது. அப்படி இருந்தும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
மாணவ– மாணவிகளின் இந்த திடீர் போராட்டத்தினால் தென்காசி பகுதியில் நேற்று மாலையில் தொடங்கிய பரபரப்பு இரவு வரை நீடித்தது.