சங்கரன்கோவில் அருகே துணிகரம் ஏ.டி.எம். கார்டு எண்ணை வாங்கி இளம்பெண்ணிடம் பணம் மோசடி
சங்கரன்கோவில் அருகே ஏ.டி.எம். கார்டு எண்ணை வாங்கி இளம்பெண்ணின் வங்கி கணக்கில் பணம் மோசடி நடந்துள்ளது.;
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே ஏ.டி.எம். கார்டு எண்ணை வாங்கி இளம்பெண்ணின் வங்கி கணக்கில் பணம் மோசடி நடந்துள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி செல்போனில் பேசிய நபரை போலீஸ் தேடுகிறது.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
செல்போனுக்கு வந்த அழைப்புநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி சால்வின் விமலா (வயது 35). இவர் சங்கரன்கோவிலில் ராஜபாளையம் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சால்வின் விமலாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். மேலும் தங்களது வங்கி கணக்கு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ஆதார் கார்டு எண் ஆகியவற்றை தாருங்கள். உடனே சரிசெய்து விடுகிறோம் என்று கூறியதாகவும் தெரிகிறது.
பணம் மோசடிஇதை உண்மை என்று நம்பிய சால்வின் விமலா, உடனே தனது வங்கி கணக்கின் ஏ.டி.எம். கார்டு எண், ஆதார் எண்ணை அந்த நபரிடம் கூறினார். அதன்பிறகு 2 நாட்கள் கழித்து சால்வின் விமலா வங்கிக்கு சென்றார். அப்போது தனது கணக்கில் இருந்து 42 ஆயிரத்து 618 ரூபாய் எடுக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சால்வின் விமலா, வங்கி மேலாளரிடம் முறையிட்டார். அவர், நாங்கள் வங்கியில் இருந்து எப்போதும் செல்போனில் பேசி எந்த விவரங்களையும் கேட்பது இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
அதன்பிறகுதான், ஏதோ மர்மநபரிடம் தான் ஏமாற்றப்பட்டதை சால்வின் விமலா உணர்ந்துள்ளார். இது தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார்.
போலீஸ் விசாரணைசால்வின் விமலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதாவது, வங்கியில் இருந்து செல்போனில் பேசிய மர்மநபர் யார்? அவர் எங்கிருந்து பேசியுள்ளார். இதற்கு முன்பாக சங்கரன்கோவில் பகுதியில் இதுபோன்று பணமோசடியில் அந்த நபர் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் பேசிய நபரிடம் ஏ.டி.எம். கார்டு எண்ணை கொடுத்து இளம்பெண் பணத்தை இழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.