வடகிழக்கு பருவமழையையொட்டி கடையம் நாணல்குளத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கின

வடகிழக்கு பருவமழையையொட்டி கடையம் நாணல்குளத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. இதனால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2017-11-09 21:15 GMT

கடையம்,

வடகிழக்கு பருவமழையையொட்டி கடையம் நாணல்குளத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. இதனால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாணல்குளம்

கடையம் அருகே உள்ள வீராசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது நாணல்குளம். இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்புக்கோழி, உன்னிக்கொக்கு, வக்கா, குளத்துக்கொக்கு, மீன்கொத்தி, மூக்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்லும். அவை இங்குள்ள மரங்களில் கூடுகள் கட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையையொட்டி, பறவைகளுக்கு சீசனை அனுபவித்து இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடமாக நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிறந்த இடமாக நாணல்குளம் விளங்கி வருகிறது. இந்த பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளதால், இங்கு இனப்பெருக்கம் செய்ய ஏதுவான சீதோஷ்ண நிலை உள்ளது.

பறவைகள் வரத்தொடங்கின

கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் பறவைகள் வரத்து முற்றிலுமாக தடைபட்டது. இதனால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பறவைகள் நாணல்குளத்துக்கு வராததால் மரங்களில் பறவைகளை பார்க்க முடியவில்லை. மக்களும் கவலை அடைந்தனர்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27–ந்தேதி தொடங்கி பெய்து வருவதால் கடையம் நாணல்குளத்துக்கு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தற்போது பறவைகள் வந்து மரங்களில் கூடு கட்டி தங்கி உள்ளன. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். வரும் நாட்களில் பறவைகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்