செய்துங்கநல்லூர் அருகே மணல் கடத்தல் லாரியை துரத்தி சென்று கைப்பற்றிய போலீசார்

செய்துங்கநல்லூர் அருகே மணல் கடத்தி சென்ற லாரியை, காரில் துரத்தி சென்று போலீசார் கைப்பற்றினர்.;

Update: 2017-11-09 20:45 GMT

ஸ்ரீவைகுண்டம்,

செய்துங்கநல்லூர் அருகே மணல் கடத்தி சென்ற லாரியை, காரில் துரத்தி சென்று போலீசார் கைப்பற்றினர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

மணல் கடத்தல்

செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலையில் செய்துங்கநல்லூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மணல் கடத்தி வந்த லாரி நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தது. செய்துங்கநல்லூரில் போலீசாரை கண்டதும், லாரியை டிரைவர் செய்துங்கநல்லூர்– அய்யனார்குளம்பட்டி சாலையில் திருப்பினார்.

லாரி சிக்கியது

அந்த சாலையில் லாரி வேகமாக சென்றது. இதை கவனித்த போலீசார் காரில் அந்த லாரியை துரத்தி சென்றனர். அப்போது அய்யனார்குளம்பட்டியில் சாலை சேறும் சகதியுமாக கிடந்ததால் லாரி நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த பொன்இசக்கி (வயது 64) என்பவரது வீட்டின் முன்புள்ள இரும்பு தடுப்புகளில் மோதியவாறு, வீட்டின் வாசலில் சரிந்து நின்றது.

உடனே லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார். பின்தொடர்ந்து துரத்தி சென்ற போலீசார் அந்த லாரியை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்