கண்ணமங்கலம் அருகே குண்டும், குழியுமாக உள்ள சாலை
கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் – அத்திமலைப்பட்டு கிராமங்களுக்கு இடையே செல்லும் நாகநதியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் – அத்திமலைப்பட்டு கிராமங்களுக்கு இடையே செல்லும் நாகநதியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் இருந்து பாலசுப்பிரமணியர் நகர் வழியாக செல்லும் தார்சாலையில் சுமார் 100 மீட்டர் இணைப்புச்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல் காணப்படுகிறது.
இந்த வழியே நடந்து செல்வோர் கீழே விழுந்து அடிபட்டு செல்கின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்கின்றனர். இந்த சாலை ஒண்ணுபுரம் மற்றும் அத்திமலைப்பட்டு கிராமங்களின் வழியே வேலூர்– ஆரணி செல்வதற்கு மிகவும் அவசியமானதாகும்.
எனவே, இந்த சாலையை உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.