மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் குறைந்தது

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது.

Update: 2017-11-09 05:42 GMT
தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. மொத்த உயரம் 57 அடி. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 210 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த மாதம் பெய்த மழைக்கு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. இதை தொடர்ந்து அணையில் இருந்து கடந்த மாதம் 15-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதில் 15-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை பழைய ஆயக்கட்டுக்கு வினாடிக்கு 200 கனஅடியும், புதிய ஆயக்கட்டுக்கு வினாடிக்கு 40 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் பழைய ஆயக்கட்டுக்கு வினாடிக்கு 60 கனஅடியாகவும், புதிய ஆயக்கட்டுக்கு வினாடிக்கு 30 கனஅடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 கனஅடியாக குறைந்துள்ளது. எனவே அணையின் நீர்மட்டம் 42 அடியாக குறைந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 219 மில்லியன் கனஅடியாக உள்ளது.

பொதுவாக நெல் மகசூல் பெறுவதற்கு 120 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும். தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகளில் 2-ம் களை எடுக்கும் பருவத்தில் அதிக தண்ணீர் தேவைப்படும். கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் அணை நிரம்பவில்லை. விவசாயமும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மேலும் செய்திகள்