வழிபாட்டு தலங்கள் உள்பட 3 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது மத்திய ரெயில்வே முடிவு
ரெயில் நிலைய பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் உள்பட 3 ஆயிரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
மும்பை,
மும்பையில் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள். இந்த துயர சம்பவத்திற்கு ரெயில் நிலைய நடைமேம்பாலத்தை ஆக்கிரமித்து இருந்த நடைபாதை வியாபாரிகளும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இதையடுத்து நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக ரெயில்வேயும், மாநகராட்சியும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, அதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் குழு அமைக்கப்பட்டது.
அகற்ற முடிவு
இந்த குழு ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. அதில், ரெயில் நிலைய பகுதிகளையொட்டி பயணிகளுக்கு இடையூறாக அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், மத்திய ரெயில்வே தனது வழித்தடத்தில் ரெயில் நிலைய பகுதிகளில் உள்ள 63 வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்து உள்ளது.
குறிப்பாக தாதர், சி.எஸ்.எம்.டி., ஜி.டி.பி. நகர், மாட்டுங்கா, சயான் உள்ளிட்ட ரெயில் நிலையங்களையொட்டி உள்ள வழிபாட்டு தலங்களை இடித்து தள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.