சட்டசபை தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் தேவேகவுடா நம்பிக்கை
சட்டசபை தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று தேவேகவுடா கூறினார்.
பெங்களுரு,
ராமநகர் மாவட்டம் கனகபுராவில் உள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கனகபுரா தொகுதியில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிராக எங்கள் கட்சி சார்பில் டி.எம்.விஸ்வநாத் போட்டியிடுவார். அவரை வெற்றி பெற செய்வதாக கட்சி நிர்வாகிகள் என்னிடம் உறுதி அளித்துள்ளனர். கனகபுராவுக்கு இப்போதும் நான் சென்றால் கூட்டம் கூடுகிறது. அங்கு சில கருத்துவேறுபாடுகள் இருந்தன. அதை இந்த கூட்டத்தில் சரி செய்துள்ளேன். ஹரதனஹள்ளியில் எங்கள் குலதெய்வ கோவிலில் பூஜை செய்தேன்.
மக்களுக்கு தெரியும்
மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் பூஜை செய்து குமாரசாமி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். மைசூருவில் நடைபெற்ற கூட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியது. இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்தது இல்லை. முன்பு நான் தவறு செய்தேன், இந்த முறை உங்களின் ஆசி வேண்டும் என்று குமாரசாமி என்னிடம் கூறினார். அதனால் நான் மைசூருவுக்கு சென்றேன். ஆனால் அந்த கூட்டத்தில் நான் பேசவில்லை.
ஜனதா தளம்(எஸ்) ஆட்சி காலத்தில் நாங்கள் என்ன செய்தோம் என்று சித்தராமையா கேள்வி கேட்டுள்ளார். நான் முதல்-மந்திரியாக இருந்தபோதும், குமாரசாமி ஆட்சி காலத்தில் என்ன பணிகள் செய்யப்பட்டன என்பது மக்களுக்கு தெரியும். ஆட்சி அதிகாரம் எங்களுக்கு கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். குறை கூறுபவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை.
எங்களுக்கு ஆதரவு
குமாரசாமி, கிராமங்களில் கட்சி தொண்டர்களின் வீடுகளில் தங்குகிறார். படுக்கை, தலையணை, போர்வையை அவர் எடுத்துச் செல்வவதாக சித்தராமையா கூறி இருக்கிறார். குமாரசாமி என்ன எடுத்துச் சென்றார் என்பதை சித்தராமையா போய் பார்க்க வேண்டும். பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுத்துள்ளனர். சட்டசபை தேர்தலில் இந்த முறை கர்நாடக மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ரூபாய் நோட்டு ரத்து பற்றி நீங்கள்(நிருபர்கள்) கேட்கிறீர்கள். குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் எவ்வளவு பணத்தை வாரி இறைக்கிறார்கள் என்பதை கவனித்து பாருங்கள். அங்கு உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். எனது மருமகள் பவானி ரேவண்ணா தேர்தலில் போட்டியிடுவது குறித்து என்ன சொன்னார் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நான் எந்த சிக்னலும் கொடுக்கவில்லை. மக்கள் முடிவு எடுப்பார்கள்.
பதவியை அலங்கரித்தேன்
நான் பிரதமராவேன் என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் அந்த பதவியை அலங்கரித்தேன். அதே போல் எனது பேரன்கள் நிகில் கவுடா மற்றும் பிரஜ்வல் கவுடா ஆகியோரின் அரசியல் எதிர்காலம் குறித்து மக்கள் தீர்மானிப்பார்கள்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.