அடையாறு ஆற்றின் கால்வாய் ஆக்கிரமிப்புகள் 3-வது நாளாக அகற்றம் 186 பேருக்கு நோட்டீஸ்
அடையாறு ஆற்றின் கால்வாய் ஆக்கிரமிப்புகள் 3-வது நாளாக அகற்றப்பட்டது. இது தொடர்பாக 186 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், ஆதனூர், ஊரப்பாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளம் தேங்கி நிற்கிறது.
இதையடுத்து கடந்த 6-ந் தேதி கூடுவாஞ்சேரி, ஆதனூர், மண்ணிவாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றின் கால்வாய் ஆக்கிரமிப்புகளையும், நீர்நிலை பகுதி ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் கணக்கீடு செய்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியை தொடங்கினர்.
இந்த நிலையில் 3-வது நாளாக கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் மண்ணிவாக்கம் விரிவு பகுதியில் அடையாறு கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்றும் தொடர்ந்து நடந்தது. கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், மண்ணிவாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை முன்னிட்டு அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நோட்டீஸ்
மேலும், வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றின் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்தும், நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டிய 186 பேருக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
அந்த நோட்டீசில், ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் இன்று (வியாழக்கிழமை) படப்பை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.