மழைக்கால உணவு பாதுகாப்பு பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

மழைக்காலத்தில் பாதுகாப்பான உணவை சாப்பிடுவது குறித்து பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2017-11-08 22:43 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழை காலங்களில் பொதுமக்கள் குளோரினேற்றம் செய்யப்பட்ட மற்றும் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். ஐ.எஸ்.ஐ. தர முத்திரை மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டும். உடனுக்குடன் தயாரிக்கப்பட்ட சூடான உணவை உட்கொள்ள வேண்டும்

தயாரிக்கப்பட்ட உணவு பொருளை பாதுகாப்பான முறையில் மூடி பயன்படுத்த வேண்டும். சமைக்கும் முன்பு காய்கறிகளை சுத்தமான உப்புநீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.

அசைவ உணவு

மேலும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். உலர் திராட்சை, வறுத்த முந்திரி, கடலை வகைகள், பிஸ்கெட்டுகள், பால் பவுடர்கள் போன்றவற்றை போதுமான அளவு சேமித்து உட்கொள்ளவேண்டும். சமைத்த உணவு பொருட்களை குளிர் சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உணவு தயாரிக்கும் முன்பும், சாப்பிடும் முன்பும் சோப்பு போட்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சாலையோரம் விற்கப்படும் உணவுகளை சாப்பிட கூடாது.

எளிதில் கிருமி தொற்று ஏற்படக்கூடிய அசைவ உணவு பொருட்களை சுத்தமாக கழுவிய பின்பு உயர் கொதிநிலை அடைந்த பின்பே உணவாக பயன்படுத்த வேண்டும். உணவு உபாதைகள், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் கஞ்சி வகைகளை நீரிழப்பு ஏற்படாமல் இருக்க உட்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நாம் பாதுகாப்பான உணவை சாப்பிட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்