மழை நீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரி நீர்மட்டம் கிடு கிடு உயர்வு ஒரு வாரத்தில் 4 அடி அதிகரிப்பு

மழை நீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடு கிடு என்று உயர்ந்து வருகிறது. ஒரு வாரத்தில் 4 அடி நீர்மட்டம் அதிகரித்தது.

Update: 2017-11-09 00:00 GMT
செங்குன்றம்,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணாநதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். இந்தநிலையில் கண்டலேறு அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி அங்கிருந்து பூண்டி ஏரிக்கு தணண்ீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் பெற்று சென்னை வாழ் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். இதனிடையே கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளித்தது.

4 அடி நீர்மட்டம் அதிகரிப்பு

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக பூண்டி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கொசஸ்தலை ஆற்று படுகை, மற்றும் கிருஷ்ணாநதி கால்வாய் அமைந்திருக்கும் பகுதிகளில் பலத்த மழை பெய்தது பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். மழை நீர் வரத்து அதிகரிப்பால் கடந்த 1-ந்தேதி ஏரியின் நீர் மட்டம் 20.35 அடியாக பதிவானது. 332 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. பலத்த மழை காரணமாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 24.35 அடிக்கு உயர்ந்தது. 756 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது.

ஒரு வாரத்தில் 4 அடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1172 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து இதே நிலையில் இருந்தால் சில நாட்களில் ஏரி முழு கொள்ளளவு எட்டும் வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரியில் நீர் மட்டம் 35 அடிக்கு தொட்டால் இங்கிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறப்புக்கு வாய்ப்பு ஏற்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்