தானாக நகர்ந்து சோதனைச்சாவடியில் மோதி நின்ற லாரி வனக்காப்பாளர் உயிர் தப்பினார்

ஆரல்வாய்மொழியில் தானாக நகர்ந்து சோதனைச்சாவடியில் மோதி நின்ற லாரி வனக்காப்பாளர் உயிர் தப்பினார்

Update: 2017-11-08 22:45 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி குமாரபுரம் சாலையில் ஒரு தனியார் சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் சிமெண்டு மூடைகளை ஏற்றிய லாரி ஒன்று கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நோக்கி புறப்பட்டது.

லாரியை இடுக்கி மாவட்டம் கொய்கானம் பகுதியை சேர்ந்த சென்ராஜ் (வயது 53) என்பவர் ஓட்டினார். ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் வந்த போது போலீசார் லாரியை தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு அதற்கான ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றார். லாரி நிறுத்தியிருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் வன சோதனைச்சாவடி இருந்தது. அப்போது சாலையின் ஓரமாக நிறுத்தியிருந்த லாரி திடீரென்று தானாக நகரத்தொடங்கி வன சோதனைச்சாவடி பெயர் பலகையை உடைத்துக்கொண்டு சென்றது.

அப்போது சோதனைச்சாவடியின் முன்பு அமர்ந்திருந்த வன காப்பாளர் அருணாச்சலம் (48) என்பவர் லாரி வருவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தார். லாரி, சோதனை சாவடி மீது மோதி நின்றது. இதைக்கண்ட டிரைவர்  விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தினார். பின்னர், வன காப்பாளர் லாரி டிரைவருக்கு அறிவுரைகூறி அனுப்பி வைத்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வனக்காப்பாளர் உயிர் தப்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதேபோல் சோதனைச்சாவடியில் நிறுத்தி இருந்த லாரி ஒன்று தானாக நகர்ந்து பஸ் நிலையம் நுழைவாயிலில் மோதி நின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்