கருப்பு பண ஒழிப்பிற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற பா.ஜ.க.வினர் 42 பேர் கைது

கருப்பு பண ஒழிப்பிற்கு ஆதரவாக போலீஸ் தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற பா.ஜ.க.வினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2017-11-08 23:00 GMT
கரூர்,

பணமதிப்பிழப்பு நாளை கருப்பு தினமாக அறிவித்து மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நவம்பர் மாதம் 8-ந் தேதியை கருப்பு பணம் ஒழிப்பு தினமாக பா.ஜ.க.வினர் அறிவித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தனர்.

அதன்படி கரூரில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் கரூர் லைட்ஹவுஸ் அருகே உள்ள மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்திற்கு நிர்வாகிகள் பலர் நேற்று மாலை வந்தனர். பின்னர், மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

போலீஸ் தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதற்கிடையில் கட்சி அலுவலகத்தின் முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். கட்சி அலுவலகத்திற்குள் நிகழ்ச்சி நடத்திக்கொள்ளலாம், வெளியில் கடைவீதியில் கையெழுத்து இயக்கம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என பா.ஜ.க. நிர்வாகிகளை போலீசார் எச்சரித்தனர்.

இந்த நிலையில் கட்சி அலுவலகத்தின் கீழ்பகுதியில் பெரிய பதாகையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தலைவர் முருகானந்தம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஊர்வலமாக கடை வீதிக்கு சென்று பொதுமக்களிடம் ஆதரவு கையெழுத்து பெற முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். இதில் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஊர்வலமாக செல்ல முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 4 பெண்கள் உள்பட மொத்தம் 42 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்