ஆரணியில் சாலையை ஆக்கிரமித்த கடைகள் அதிரடி அகற்றம் 3-வது நாளாக பணிகள் தீவிரம்

ஆரணியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணி 3-வது நாளாக தொடர்ந்தது.

Update: 2017-11-08 23:00 GMT
ஆரணி,

ஆரணியில் உள்ள காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, புதிய பஸ் நிலையம் செல்லும் வழி, மண்டிவீதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து பலர் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். புதிய பஸ் நிலைய பகுதியில் பழ வியாபாரிகளுக்கு கடைகள் கட்டப்பட்டு டெண்டர் மூலம் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் அங்கு கடை வைக்காமல், வாடகையும் கொடுக்காமல் ரோட்டை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதற்காக செய்யாறு உதவி கலெக்டர் கிருபானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 6-ந் தேதிக்குள் வியாபாரிகள் தாங்களாகவே தங்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக்கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால் அதன்படி யாரும் கடைகளை அகற்றிக்கொள்ளவில்லை.

அதைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம், தாசில்தார் சுப்பிரமணி, நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். காலை முதல் இரவு வரை கொட்டும் மழையில் இந்த பணி நடைபெற்றது. நேற்று முன்தினமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.

ஆக்கிரமிப்பு மீண்டும் தொடர்ந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதற்கு பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் வரவேற்றுள்ளனர். 

மேலும் செய்திகள்