800 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய மண்பாண்டங்கள், கற்கோடாரிகள் கண்டுபிடிப்பு

எருமப்பட்டி அருகே சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த முதுமக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் மற்றும் கற்கோடாரிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

Update: 2017-11-08 22:45 GMT
நாமக்கல்,

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆராய்ச்சியாளர் பாபு, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, பவித்திரம், வரகூர் பகுதிகளில் உள்ள பழமையான கோவில்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இவர் பவித்திரம் கிராமத்தில் நத்தமேடு என்ற பகுதியில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது, அங்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த முதுமக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் மற்றும் கற்கோடாரிகளை கண்டுபிடித்து உள்ளார். இதுகுறித்து ஆராய்ச்சியாளர் பாபு கூறியதாவது:-

பவித்திரம் பகுதியில் 800 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வசித்து உள்ளனர். அதை உறுதி செய்யும் விதமாக அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், கற்கோடாரிகள், அலங்கார விளக்கு மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு பயன்படுத்திய முதுமக்கள் தாலியின் உடைந்த பாகங்கள் போன்றவை கிடைத்து உள்ளன.

சிவன் கோவில்

மேலும் இப்பகுதியில் பழமையான சிவன் கோவில் இருந்து உள்ளது. பின்னர் அது இல்லாமல் போனதற்கான தடயங்களும் கிடைத்து உள்ளது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க பீடம் மற்றும் கோவிலின் தூண்கள், சேதம் அடைந்த நந்திசிலை, உடைந்த துவார பாலகர்கள் சிலையும் தற்போது அங்குள்ள முட்புதர்களிலும், வயல்களிலும் சிதறி கிடக்கின்றன.

இதன்மூலம் முற்காலத்தில் இப்பகுதியில் கலைநயமிக்க அழகிய சிற்ப வேலைகள் நிறைந்த கற்கோவில் இருந்ததை அறிய முடிகிறது. அது பிற்காலத்தில் அரசர்களின் போர் அல்லது பிற காரணங்களால் இல்லாமல் போனது. அரசு மற்றும் தொல்லியல் துறையினர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு தகவல்கள் வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்