மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து சேலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2017-11-08 23:00 GMT
சேலம்,

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி இரவு இந்தியா முழுவதும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகவும், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்காகவும் வங்கி, ஏ.டி.எம். மையங்களில் மணிக்கணக்கில் பொதுமக்கள் காத்து கிடந்தனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு ஆனது. அதையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் நவம்பர் 8-ந் தேதியை கருப்புதினமாக கடைபிடிப்பதுடன் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என அறிவித்தன.

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று சேலம் ஆனந்தாபாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். பின்னர் அங்கிருந்து 2-வது அக்ரஹாரம் வழியாக ஊர்வலமாக சென்று சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு வந்தடைந்தது.

ஊர்வலத்தின்போது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், சிறு, குறு தொழில்கள் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டது குறித்தும் விளக்கும் துண்டு பிரசுரங்களை காங்கிரசார் வினியோகம் செய்தனர்.

அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. தேவதாஸ், முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் ஆக்ஸ்போர்டு ராமநாதன், மகளிர் அணி நிர்வாகி சாரதாதேவி மற்றும் நிர்வாகிகள் ஏ.ஆர்.பி.பாஸ்கர், எம்.டி.சுப்பிரமணியன், மெடிக்கல் பிரபு, எம்.ஆர்.சுரேஷ், சிவகுமார், வரதராஜ், ஷேக் இமாம், தாரை குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்தும், நாட்டில் 24 சதவீத தொழில்கள் அழிந்து விட்டன என்றும் பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாலையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் எதிரே மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுபோல நவம்பர் 8-ந்தேதியை கருப்புதினமாக கம்யூனிஸ்டு கட்சிகளும் கடைபிடித்து போராட்டம் நடத்தியது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு, எஸ்.யூ.டி.ஐ. ஆகியவை சார்பில் சேலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தங்கவேலு முன்னிலை வகித்தார். இதில் மோகனசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, பிரதமர் மோடிக்கு எதிராகவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததாகவும் கோஷம் எழுப்பப்பட்டது. 

மேலும் செய்திகள்