தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18–ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18–ந் தேதி நடக்கிறது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் வேலைநாடுபவர்கள் நாளைக்குள்(வெள்ளிக்கிழமை) பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.;

Update: 2017-11-08 22:15 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வருகிற 22–ந் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்ட அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமை தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 18–ந் தேதி(சனிக்கிழமை) நடத்துகின்றன. இந்த முகாமில் 60 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆகையால் வேலை நாடுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாமில் எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி, என்ஜினீயர் பட்டதாரி உள்ளிட்டோர் கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும், அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறும் வேலைநாடுபவர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தாமாகவே அரசு அங்கீகாரம் பெற்ற ncs.gov.in என்ற இணையதளத்தில் நாளைக்குள்(வெள்ளிக்கிழமை) பதிவு செய்ய வேண்டும். அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்.

இதே போன்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே பதிவு செய்து ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2015 வரை உள்ள புதுப்பித்தல் காலக்கெடுவுக்குள் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள், அரசு அறிவித்து உள்ள சிறப்பு சலுகை அடிப்படையில் பதிவை புதுப்பிக்கலாம். முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்