எங்களுக்கு பதவி முக்கியமல்ல: மக்களின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் நாராயணசாமி உறுதி
எங்களுக்கு பதவி முக்கியமல்ல. மக்களின் நலன்தான் முக்கியம். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நாளை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. அதன்படி நேற்று புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
கடந்த ஆண்டு இதே நாளில் அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு முடிவை எடுத்தார். இதனால் கருப்பு பணம், தீவிரவாதம், கள்ளநோட்டு ஒழியும் என்றார்கள். அப்போது ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி புழக்கத்தில் இருந்தது. அதில் ரூ.17 ஆயிரம் கோடிதான் வங்கிக்கு வரவில்லை. ரூ.32 கோடிதான் கள்ளநோட்டாக இருந்தது.
பாரதீய ஜனதா கட்சியினர் வைத்திருந்த கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் பணம் எடுக்க வரிசையில் நின்று உயிரிழந்தனர். காங்கிரஸ் ஆட்சியில் 18 சதவீதம்தான் அதிகபட்ச வரியாக இருந்தது. ஆனால் இப்போது சரக்கு மற்றும் சேவை வரி என்று 28 சதவீதமாக உயர்த்தி உள்ளனர்.
இதனால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ளது. இதன் எதிரொலியாக குஜராத்தில் நடைபெற உள்ள தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வியை தழுவப் போகிறது. மோடியின் சகாப்தம் முடிவுக்கு வரும் காலம் இது. மத்திய ஆட்சியாளர்களை எதிர்த்து பேசுபவர்கள் மீது சி.பி.ஐ., வருமான வரித்துறையை ஏவி நடவடிக்கை எடுக்கிறார்கள்.
மத்தியபிரதேசத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக வியாபம் ஊழல் நடந்தது. சத்தீஷ்கரில் அரிசி ஊழலும், ராஜஸ்தானில் சுரங்க முறைகேடும் நடந்தது. பா.ஜ. கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனும் முறைகேட்டில் சிக்கியுள்ளார். இதற்கெல்லாம் விசாரணை வைக்கவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசை வீட்டுக்கு அனுப்பும் காலம் இப்போது வந்துவிட்டது.
நாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் இந்த இடத்துக்கு பின்னால் ஒருவர் (கவர்னர் கிரண்பெடி) உள்ளார். அவர் விவசாயிகள் கடன் ரத்து, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு முழு கல்விக்கட்டணம் ஆகியவற்றை வழங்கும் கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார். எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கும் கோப்பையும் மத்திய அரசுக்கு அனுப்புகிறார்.
மக்களுக்கு இலவச அரிசி, வேட்டி–சேலை, சர்க்கரை வழங்கும் கோப்புகளை திருப்பி அனுப்புகிறார். சுப்ரீம் கோர்ட்டு இப்போது ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. கவர்னர்கள் மாநில வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும், குந்தகம் விளைவிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இதை பார்த்தாவது கவர்னர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.
நமக்கு பதவி முக்கியமல்ல. புதுவை மாநில மக்களின் நலன்தான் முக்கியம். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம். பாரதீய ஜனதா கட்சியினர் ஆயுதபூஜை கொண்டாடினால் அங்கு கவர்னர் செல்கிறார். அவர் பாரதீய ஜனதா கட்சியின் ஏஜண்டாக செயல்படுகிறார்.
எந்த சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். மக்கள் நலனை பாதுகாக்க தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.