தட்டாஞ்சாவடி செந்திலை கைது செய்ததில் மனித உரிமை மீறப்படவில்லை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தட்டாஞ்சாவடி செந்திலை கைது செய்ததில் மனித உரிமை மீறப்படவில்லை என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-08 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை கோரிமேடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 15.2.2017 அன்று ரவுடி முரளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சுந்தர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட பிரபல தாதா தட்டாஞ்சாவடி செந்தில் தலைமறைவாக இருந்தார். இவரை கடந்த 4–ந் தேதி மதுரையில் வைத்து புதுவை போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தட்டாஞ்சாவடி செந்திலை கோரிமேடு போலீசார் நேற்று ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:–

சுந்தர் என்னிடம் வந்து தனக்கும், ரவுடி முரளிக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் நாங்கள் அடிக்கடி மோதிக்கொள்கிறோம். எனவே தங்களுக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்படி பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினரும் வந்தனர். அப்போது எதிர்பார்க்காத தருணத்தில் சுந்தர் தரப்பினர் முரளியை வெட்டினார்கள். இதில் முரளி இறந்துவிட்டான். எனக்கும் முரளி கொலைக்கும் சம்பந்தமில்லை.

இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையே தட்டாஞ்சாவடி செந்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பினர் புகார் கூறினார்கள்.

இது குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தட்டாஞ்சாவடி செந்தில் கைது செய்தபோது சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படியே காவல்துறை நடந்து கொண்டது. அவருக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கொடூர குற்றவாளிகளை காண்பிப்பது வழக்கம்.

கடந்த 5–ந் தேதி பத்திரிகையாளர்கள் முன்னால் காண்பித்த போது தட்டாஞ்சாவடி செந்திலை தரையில் அமருமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர் தன்னுடைய விருப்பப்படி முட்டியால் அமர்ந்தார். இதை ஒரு சிலர் தவறுதலாக எடுத்துக்கொண்டனர்.

தட்டாஞ்சாவடி செந்தில் மீது பல்வேறு கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தால் மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. இவரை தமிழக காவல்துறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இவ்வாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் கூறினார்.

மேலும் செய்திகள்