பாலக்கோடு அருகே பெண் அடித்துக்கொலை அண்ணன், தம்பி கைது

பாலக்கோடு அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-08 23:00 GMT

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி லட்சுமி அம்மாள் (வயது 60). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சின்னசாமியும், லட்சுமி அம்மாளும் பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு லட்சுமி அம்மாள் கொள்ளுப்பட்டிக்கு வந்தார். அப்போது சின்னசாமியின் தம்பிகள் சின்னகுட்டி (46), மகாலிங்கம் (45) ஆகியோர் லட்சுமி அம்மாளிடம் சொத்து தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரம் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சின்னகுட்டி, லட்சுமி அம்மாளை தாக்கியுள்ளார். இதில் சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னகுட்டியும், மகாலிங்கமும், லட்சுமி அம்மாளின் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டினர். பின்னர் ஒரு மொபட்டில் உடலை வைத்துக்கொண்டு தொம்மை குண்டு மலைக்கு சென்றனர். அங்கு வனப்பகுதியில் உடலை வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

ஊருக்கு சென்ற மனைவி மீண்டும் வராததால் சந்தேகமடைந்த சின்னசாமி கொள்ளுப்பட்டிக்கு வந்து விசாரித்தார். அப்போது சின்னகுட்டியும், மகாலிங்கமும் சரியாக பதில் சொல்லவில்லை. இதைத் தொடர்ந்து அவர் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அண்ணன், தம்பி இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது லட்சுமி அம்மாளை அடித்துக்கொன்று உடலை வனப்பகுதியில் வீசியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் தொம்மை குண்டு வனப்பகுதிக்கு சென்று லட்சுமி அம்மாளின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அதே இடத்திலேயே உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக சின்னகுட்டி, மகாலிங்கம் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்