டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த தேவராயம்பாளையம் மக்கள்
தங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த தேவராயம்பாளையம் மக்களால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட இச்சிப்பட்டி ஊராட்சி தேவராயம்பாளையத்தில் கடந்த 2–ந் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள ஒரு மண்டபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்கூடங்களும் செயல்படவில்லை.
இதைத்தொடர்ந்து பல்லடம் தாசில்தார் சுப்பிரமணி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை நேற்று முன்தினம் தற்காலிகமாக மூடினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் கடை தங்கள் ஊரில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் தேவராயம்பாளையத்தில் நேற்று 2–வது நாளாக விசைத்தறி கூடங்கள் உள்ளிட்ட தொழிற்கூடங்கள் செயல்படவில்லை. டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 10–க்கும் மேற்பட்ட வேன்களில் நேற்றுகாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம் என்று அனைவரும் ரேஷன் கார்டுகளுடன் வந்து கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் 10 பேரை மட்டும் அதிகாரிகள் கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர். கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை அவர்கள் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
எங்கள் ஊரில் விவசாயம் குறைந்து போனதால் விசைத்தறி தொழில் செய்து வருகிறோம். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் அரசியல் கட்சிக்கொடிக்கம்பங்கள் கூட கிடையாது. ஊர்மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதால் ஊரின் அமைதி கெடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். எங்கள் ஊரில் டாஸ்மாக் கடையை அகற்றும் வரை விசைத்தறி மற்றும் அனைத்து தொழில்களையும் நிறுத்தம் செய்துள்ளோம். இனி எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை எதுவும் அமைக்காமல் இருக்க உறுதி கூற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
தேவராயம்பாளையத்தில் டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்ததை தொடர்ந்து பின்னர் ஊர்மக்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.