பண மதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

பண மதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து, ஊட்டியில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-08 22:30 GMT

ஊட்டி,

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தவும், அதற்கு மாற்றாக வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியாமலும் அவதி அடைந்தனர். இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை இன்றுடன் (புதன்கிழமை) ஒரு ஆண்டு நிறைவடைகிறது.

இந்த பணமதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து தமிழகம் முழுவதும் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து ஊட்டி ஐந்து லாந்தர் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமச்சந்திரன், திராவிடமணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அனிபா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுதாகீர், மதசார்பற்ற ஜனதா தள கட்சி மாவட்ட தலைவர் விஸ்வநாதன், தி.மு.க. ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்