பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து ராமநாதபுரத்தில் தி.மு.க.வினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2017-11-08 23:00 GMT

ராமநாதபுரம்,

மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ஒரு ஆண்டு நிறைவடைந்த தினத்தை கருப்பு தினமாக அறிவித்து தி.மு.க. சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராமநாதபுரத்தில் மாவட்ட தி.மு.க. சார்பில் கருப்பு தினமாக கடைப்பிடித்து நேற்று காலை அரண்மனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமை தாங்கினார்.

தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுப.த.சம்பத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் சங்கு முத்துராமலிங்கம், இலக்கிய அணி கிருபானந்தம், பெரியபட்டிணம் நகர் செயலாளர் அப்துல்மஜீது, கீழக்கரை நகர் செயலாளர் பசீர்அகமது, மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் வருசை முகம்மது, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் ரஜிசேதுபதி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென மழை பெய்தது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் திவாகரன் பேசியதாவது:– கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் முழு அளவில் பாதிக்கப்பட்டனர். திருமணம் உள்ளிட்ட வீட்டு நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அவதிப்பட்டனர். வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தினை உங்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வோம் என்று கூறி பிரதமர் மோடி மக்கள் உழைத்து தங்களின் வங்கி கணக்கில் சேர்த்து வைத்த பணத்தை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளியது. தங்களின் பணத்தை எடுக்க காத்திருந்து கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாகினர்.

பண மதிப்பிழப்பினால் ஏற்பட்ட சோக நிகழ்வினை மக்கள் யாரும் மறக்க மாட்டார்கள். மத்திய அரசின் இந்த தவறான நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இன்றுவரை அதில் இருந்து மீள முடியவில்லை. சிறு, குறு வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்களை மூடிவிட்டு சென்றுவிட்டனர். மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே பரிதாபமாக மாறிவிட்டது. தவறான முடிவால் மக்களை மிகவும் துயரத்திற்கு மத்திய அரசு உள்ளாக்கிவிட்டது. இவ்வாறு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடி அணிந்தும் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

மேலும் செய்திகள்