கந்து வட்டியால் பாதிக்கப்படும் குடும்பங்கள் புகார் செய்யலாம் போலீஸ் அதிகாரி அறிவுரை

கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படும் குடும்பங்கள் போலீசில் புகார் தெரிவிக்கலாம் என்று பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.;

Update: 2017-11-08 22:45 GMT

பரமக்குடி

பரமக்குடியில் உள்ள பள்ளி மாணவ–மாணவிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஆகியவற்றோடு நட்புறவை ஏற்படுத்தும் வகையில் நகர் போலீஸ் நிலையத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு காவல்துறையின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்பு மாணவர்களுக்கு காவல்துறையின் பதிவேடுகள், துப்பாக்கிகளை இயக்கும் முறை, வழக்கு பதிவு செய்யும் முறை, கைதிகள் தங்கியிருக்கும் அறை உள்பட பல்வேறு வகையான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா கூறியதாவது:– பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகள் ஒழுக்கத்துடன் கல்வியை மட்டுமே கற்க வேண்டும். பெற்றோர்கள் வருமானத்துக்கு ஏற்றவகையில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். குடும்ப கஷ்டத்திற்காக பெற்றோர்கள் கந்து வட்டி வாங்குவதை தடுக்க வேண்டும். அதேபோல் பெற்றோர்களை கந்து வட்டி வாங்கும் அளவுக்கு நிர்பந்திக்கக்கூடாது. கந்து வட்டி கொடுமையால் அவதிப்படும் குடும்பத்தினர் யாரேனும் இருந்தால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம்.

சாதி, மதங்களை கடந்து ஒற்றுமை உணர்வுடன் நண்பர்களாக பழக வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து சாலைகளை கடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அஜ்மல்கான், பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்