கிராம நிர்வாக அலுவலர் நியமனம் இல்லாததால் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் மானாமதுரை பகுதி மக்கள்

மானாமதுரை பிர்க்காவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் நியமனம் இல்லாததால் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2017-11-08 22:30 GMT

மானாமதுரை,

மானாமதுரை தாலுகாவில் செய்களத்தூர், மானாமதுரை, முத்தனேந்தல் ஆகிய மூன்று பிர்க்காக்களை சேர்ந்த 32 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு சில வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். இணையதளம் மூலம் சான்றுகள் பெறலாம் என்றாலும், வாரிசு சான்று, முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகளில் கிராம நிர்வாக அலுவலர் கையொப்பம் அவசியம். இதுதவிர தற்போது விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல், சிட்டா சான்று பெற வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் மானாமதுரை பகுதியில் சில வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் நியமனம் இல்லாததால் அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் சான்றிதழ் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பலன்கள் கிடைக்க பெறாமல் உள்ளனர்.

குறிப்பாக மானாமதுரை நகர்ப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாறுதல் செய்யப்பட்டார். இதனால் அருகில் உள்ள தீத்தான்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் கூடுதல் பொறுப்பாக மானாமதுரையை கவனித்து வருகிறார். போதிய நேரம் இல்லாததால் வாரத்திற்கு ஒன்றிரண்டு நாள் மட்டுமே வருகை தருவதால் கையெழுத்து பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மானாமதுரை நகர்ப்பகுதிக்கு மட்டுமின்றி, இப்பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்