சிவகங்கையில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து சிவகங்கையில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-08 23:00 GMT

சிவகங்கை,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி உயர் மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அத்துடன் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்தநிலையில் நவம்பர் 8–ந்தேதியை கருப்பு பண எதிர்ப்பு தினம் என்று பா.ஜ.க. சார்பில் அனுசரிக்கப்பது என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் தமிழகத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் பொருளாதார இழப்பு மற்றும் தொழில் முடக்கம் செய்ததாக மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களை தவிர மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சிவகங்கையில் மாவட்ட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து அரண்மனைவாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமுத்து, சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், நகர் தி.மு.க. செயலாளர் துரைஆனந்த், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் தலைவர்கள் ராஜரத்தினம், அரசு, மாவட்ட துணை தலைவர் சண்முகராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சிதம்பரம், சோனை மற்றும் திராவிடர் கழக பேரவை மாநில செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்