விராரில் வீட்டிற்கு அழைத்து பெண் இன்சூரன்ஸ் ஏஜெண்டை கொன்று நகை கொள்ளை விதவை கைது

விராரில் வீட்டிற்கு அழைத்து பெண் இன்சூரன்ஸ் ஏஜெண்டை கொன்று நகையை கொள்ளையடித்த விதவை கைது செய்யப்பட்டார்.

Update: 2017-11-07 22:30 GMT

வசாய்,

இமாசலபிரதேசத்தை சேர்ந்தவர் விகாஷ். என்ஜினீயர். மும்பை மலபார்ஹில்லில் வேலை பார்த்து வருகிறார். காந்திவிலியில் வசித்து வந்த இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன் பால்கர் மாவட்டம் விராரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தனது தாய் கீர்த்திநிதி(வயது67), மனைவி மஞ்சு மற்றும் 3 வயது மகனுடன் குடியேறினார். கீர்த்திநிதி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.

அவர் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து வெளியில் சென்ற கீர்த்திநிதி வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த விகாஷ் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் அவரது தாயை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபற்றி அவர் அர்னாலா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், கீர்த்திநிதி அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வரும் புஷ்பா(47) என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றிருந்தது தெரியவந்தது.

உடனே விகாஷ் அங்கு சென்று பார்த்தார். அப்போது புஷ்பாவின் வீட்டுக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாக தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விகாஷ், உடனே போலீஸ் நிலையத்திற்கு சென்று சம்பவத்தை கூறினார்.

இதையடுத்து போலீசார் புஷ்பாவின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். அப்போது, அவரது வீட்டின் கதவு வெளிபக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு கழிவறை அருகே கீர்த்திநிதி பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்தன. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கீர்த்திநிதியை அடித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளை புஷ்பா கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.

இந்தநிலையில், போலீசார் அவரை தேடிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர். விசாரணையின் போது அவர், இன்சூரன்ஸ் தொடர்பாக பேச வரும்படி தனது வீட்டிற்கு அழைத்து கீர்த்திநிதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்த கீர்த்திநிதியின் 4 வளையல்கள் உள்ளிட்ட தங்கநகைகள், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

புஷ்பா மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் புஷ்பா விதவை என்பதும், அவர் 2 மகன்களுடன் வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்