அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சை எடுத்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணம் அடையலாம்

அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சை எடுத்து கொண்டால் டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணம் அடையலாம் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விக்ரம் கபூர் தெரிவித்து உள்ளார்.

Update: 2017-11-07 22:30 GMT
நாமக்கல்,

வடகிழக்கு பருவமழை, டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தித்துறை அரசு முதன்மை செயலாளருமான விக்ரம் கபூர் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

பொது மக்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. முறையான சிகிச்சையினை அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் விரைவில் அந்நோயிலிருந்து குணமடைந்து விடலாம் என்பதை பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.

நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளில் இலவசமாக பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்பத்திரியில் ஆய்வு

தொடர்ந்து அவர் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பேரிடர் மேலாண்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விக்ரம் கபூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நோயாளிகளின் விவரப் பதிவேடு, உள்நோயாளிகள் பிரிவு என பல்வேறு வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) ஆர்.மணி, இணை இயக்குனர் (நலப்பணிகள்) சரஸ்வதி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்