சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே சாலையை ஆக்கிரமித்து மீன்கள் விற்பனை
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் மூலம் மீன்கள் விற்பனை.;
சென்னை,
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு வானகரத்தில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் மீன்கள் வாங்குவதற்கான கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக வானகரத்தில் இருந்து மீன்களை எடுத்து வரும் மீனவர்கள் சிலர் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் மூலம் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் மீன்களின் கழிவுகள் சாலையிலேயே கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இந்து கோவில்கள் அருகே உள்ளதால் சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது.
எனவே மீன்களை விற்பனை செய்வதற்கு என்று தனியாக மார்க்கெட் இருக்கும் போது, சாலையை ஆக்கிரமித்து மீன்களை விற்பனை செய்ய போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் அனுமதிக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.