நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை: வைகை அணை நீர்மட்டம் 57 அடியாக உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் 57 அடியாக உயர்ந்துள்ளது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்ததையொட்டி திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் சரியும் நிலை உருவானது.
இந்தநிலையில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூல வைகை ஆறு மற்றும் முல்லைப்பெரியாறு அணை பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வைகை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் 55 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 57 அடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வைகை அணையின் பிரதான நீர்ஆதாரமாக விளங்கும் மூல வைகை ஆற்றிலும் தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அந்த தண்ணீர், அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவான 71 அடியை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றுகாலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 57.15 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1,469 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், மதுரை, சேடப்பட்டி குடிநீர் தேவைக்காகவும் சேர்த்து வினாடிக்கு 710 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 3,080 மில்லியன் கனஅடியாக இருந்தது.