குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதரக் கேடு என புகார்: உச்சிமேடு ஏரிக்கரையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு

பொது மக்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்திலும், ஏரிக்கரையிலும் குப்பைகள் கொட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து உச்சிமேடு ஏரிக்கரை பகுதியை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-11-07 22:45 GMT

பாகூர்,

புதுச்சேரி மாநிலம் கன்னியக்கோவில் கிராமத்தில் பாகூர்–கன்னியக்கோவில் சாலையில் ரோடு ஓரத்தில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்டி தேக்கி வைத்துள்ளனர். அதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், அதேபோல் உச்சிமேடு ஏரிக்கரையிலும் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் கவர்னருக்கு பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் புகார்கள் வந்தன.

அதைத் தொடர்ந்து அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கவர்னர் கிரண்பெடி நேற்றுக்காலை கவர்னர் மாளிகையில் இருந்து கன்னியக்கோவில் பகுதிக்கு சென்றார்.

முதலில் குப்பைகள் பாகூரிலிருந்து கன்னியக்கோவில் கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் உச்சிமேடு ஏரிக்கரைக்கு சென்ற அங்கு குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம், பொது மக்களை பாதிக்கக்கூடிய அளவில் இதுபோல் குப்பைகளை கொட்டக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

மேலும் கிராமங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் குப்பைகளை சேகரித்து அதனை உரமாக தயாரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். சுகாதாரம் மற்றும் நீர்மேலாண்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு கிராமத்திலும் கருத்தரங்கு நடத்தும்படியும் கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்தநிலையில் பாகூர் பகுதியில் வெள்ளச்சேதங்களை பார்வையிட கவர்னர் கிரண்பெடி வர இருப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து அந்தபகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு பாகூர் மாதா கோவில் அருகே வந்து நின்றனர். இலவச அரிசி வழங்குவதற்கும் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் கவர்னர் முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறி அவருக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அவர்கள் அங்கு திரண்டதாகவும், கவர்னரை சந்தித்து இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைக்க காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் கன்னியக்கோவில் மற்றும் உச்சிமேடு ஏரிப்பகுதிகளை பார்வையிட்ட கிரண்பெடி, ஆய்வை அத்துடன் முடித்துக்கொண்டார். தொடர்ந்து கவர்னர் மாளிகையில் அலுவல் தொடர்பான கூட்டம் நடக்க இருப்பதாக கூறி அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

அதன் காரணமாக கவர்னரை சந்திக்க, பாகூர் மாதா கோவில் அருகே காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கவர்னர் ஆய்வின்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முக சுந்தரம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்