ஏம்பலத்தில் போலீசார் அதிரடி: ரே‌ஷன் அரிசி மூட்டைகளை பதுக்கிய ரைஸ் மில் அதிபர் கைது

வில்லியனூர் அருகே ஏம்பலத்தில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் போலீசார் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக ரைஸ்மில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-07 23:00 GMT

வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலம் ஏம்பலத்தில் உள்ள ஒரு ரைஸ் மில்லுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக புதுவை மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை ஏம்பலம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஏம்பலம்–புதுச்சேரி மெயின் ரோட்டில் நின்ற ஒரு மினிவேனில் இருந்து வேன் டிரைவர் அரிசி மூட்டைகளை அருகில் உள்ள அரிசி ஆலையில் இறக்கிக்கொண்டிருந்ததை பார்த்தனர். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து அரிசி மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்தபோது, அந்த அரிசி புதுச்சேரி மாநில நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்பட்ட அரிசி என்பதும், அந்த அரிசியை அவர் ஏம்பலத்தில் ரைஸ் மில்லுக்கு கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் ரைஸ் மில்லில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அந்த ரைஸ் மில்லில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேசன் அரிசி மூட்டைகளை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

அது தொடர்பாக ரைஸ் மில் உரிமையாளர் அப்பு என்கிற இதயத்துல்லாவை (வயது 32) கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மீது ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதேபோல் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்குகள் உள்ளதும், இவர் மீது தமிழக அரசு குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதும் தெரிய வந்தது. மேல் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்