மத்திய அரசின் முடிவினை மீறும் கவர்னரின் உத்தரவு செல்லாது நாராயணசாமி பதிலடி

வாரிய தலைவர்களின் பதவி நீட்டிப்பு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவினை மீறும் கவர்னர் கிரண்பெடியின் உத்தரவு செல்லாது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2017-11-08 00:00 GMT

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேருக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி அப்போது ஒப்புதல் அளிக்கும் போது ஓராண்டுக்கு மட்டுமே இதை அனுமதிப்பதாகவும் அதன்பிறகு அவர்களது செயல்பாட்டை பொறுத்து பதவிக்காலத்தை நீட்டிக்க அனுமதிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் வாரிய தலைவர்களின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதன்பிறக அவர்களது பதவிக்காலத்தை நீட்டிக்க கவர்னர் கிரண்பெடி மறுத்துவிட்டார். இதையொட்டி அவர்களது பதவிக்காலத்தை நீட்டிக்க அமைச்சரவையில் முடிவு எடுத்து அதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் அதன்பிறகும் ஒப்புதல் அளிக்காததுடன் இதுதொடர்பாக முடிவு எடுக்குமாறு மத்திய உள்துறைக்கு கவர்னர் கிரண்பெடி கோப்பை அனுப்பி வைத்தார். இந்தநிலையில் புதுவை அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளித்து வாரிய தலைவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 7 எம்.எல்.ஏ.க்களையும் வாரிய தலைவர்களாக நியமித்து தலைமை செயலாளர் மனோஜ் பரிதா உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் தனது ஒப்புதலின்றி தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே அதை நிறுத்தி வைப்பதாக கவர்னர் கிரண்பெடி நேற்று முன்தினம் இரவு அறிவித்தார்.

கவர்னரின் இந்த உத்தரவு தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:–

வாரிய தலைவர்கள் பதவி நீட்டிப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே அமைச்சரவையில் முடிவு செய்து கோப்பு அனுப்பினோம். ஆனால் அதற்கும் அவர் ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசுக்கு அனுப்பினார்.

தற்போது வாரிய தலைவர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்து கவர்னரின் முடிவுக்கு எதிரான முடிவினை மத்திய அரசு எடுத்துள்ளது. தனது முடிவுக்கு எதிராக உத்தரவு வந்துள்ள நிலையில் கவர்னர் தான் பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.

ஆனால் கிரண்பெடி மத்திய அரசின் முடிவினை தடுத்து நிறுத்துகிறார். அதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. கவர்னரோ, முதல்–அமைச்சரோ எந்த உத்தரவு பிறப்பித்தாலும் நேரடியாக பிறப்பிக்க முடியாது. அதை நிர்வாக சீர்திருத்தத்துறை மூலம்தான் பிறப்பிக்க முடியும்.

ஆனால் வாரிய தலைவர்கள் தொடர்பான கோப்பினை கவர்னர் நேரடியாக கையெழுத்திட்டு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவு செல்லாது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். கவர்னர் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம். இதுதொடர்பாக மத்திய உள்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். வாரிய தலைவர்கள் விரைவில் பொறுப்பேற்பார்கள்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்