மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவை எட்டியது உபரிநீர் வெளியேறுகிறது
மதுராந்தகம் ஏரி நேற்று முழுகொள்ளளவை எட்டியது. இதனால் தானியங்கி ஷட்டர் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி. இந்த ஏரி மூலமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குடிநீர் வினியோகத்திற்கும் இங்குள்ள நீர் பயன்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் கடந்த சில தினங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மதுராந்தகம் ஏரி நிரம்பி விட்டதாகவும், ஏரி உடையும் அபாயம் இருப்பதாகவும் தகவல் பரவியது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-
முழுகொள்ளளவை எட்டியது
மதுராந்தகம் ஏரியின் மொத்த கொள்ளளவு 23.3அடி ஆகும். ஏரிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக உபரிநீர் தானியங்கி ஷட்டர் மூலமாக வெளியேறுகிறது. கனமழை பெய்யாத நிலையில் ஏரி உடையும் அபாயம் இல்லை.
உத்திரமேரூர், காஞ்சீபுரம் பகுதிகளில் உள்ள ஏரிகளில் உபரிநீர் அதிகமாக திறந்து விடப்பட்டால், மதுராந்தகம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும். அப்போது தான் மதுராந்தகம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இருப்பினும் 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.