ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
வாலாஜாபாத்,
ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்காடு தரைப்பாலம் பகுதியில் ஆட்டோவை நிறுத்தி வைத்து சந்தேகத்திற்கிடமான வகையில் பேசிக்கொண்டிருந்த 5 பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது அங்கிருந்து அவர்கள் தப்பியோடினர்.
அவர்களில் தாம்பரம் சேலையூரை சேர்ந்த சங்கர் (வயது 30) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின் அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகாவை சேர்ந்த வெங்கடேசன்(29), ஆலன் (29), உளுந்தூர்பேட்டை தாலுகா கொளத்துரை சேர்ந்த ஏழுமலை வயது (30) பாண்டியன்(25) ஆகிய நான்கு பேரையும் தேடி மடக்கிப் பிடித்தனர்.
கொள்ளையடிக்க திட்டம்
பின்னர் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் இவர்கள் 5 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி அப்பகுதிக்கு வந்திருந்தது தெரியவந்தது.
மேலும் ஆலன் மீது குன்றத்தூர், மதுரவாயல், வெள்ளவேடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடிப்பதற்காக கொண்டு வந்த கடப்பாரை, கத்தி, இரும்பு ராடு, கையுறை மற்றும் ஆட்டோ உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்பு உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.