தேங்கிய மழைநீரால் மண் அரிப்பு வடசென்னை அனல் மின்நிலைய உயர்கோபுரம் கீழே விழும் அபாயம்

தேங்கிய மழைநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு வடசென்னை அனல் மின்நிலைய உயர்கோபுரம் கீழே விழும் அபாயம் உருவாகி உள்ளது.;

Update: 2017-11-07 23:30 GMT
பொன்னேரி,

பொன்னேரி அருகே காரனோடை கிராமம் உள்ளது இந்த கிராமத்தின் வழியாக கொசஸ்தலை ஆறு செல்கிறது. வடகிழக்கு பருவமழை கடந்த ஒருவார காலமாக பெய்து வருகிறது. காரனோடை மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் உள்ள மழைநீரை கொசஸ்தலை ஆற்றில் விடுவதற்காக சிமெண்டு குழாயை பொதுப்பணித்துறையினர் புதைத்துள்ளனர்.

இந்த குழாய் வழியாக மழைநீர் கொசஸ்தலை ஆற்றில் சேருகிறது. இந்த ஆற்றின் 100 மீட்டர் தொலைவில் வடசென்னை அனல் மின்நிலைய உயர்கோபுரம் உள்ளது. ஆற்றின் அருகில் மணல் திருட்டு நடைபெறுவதால் பள்ளமாக உருவெடுத்து மழைநீர் தேங்கி நின்றது. அவ்வாறு தேங்கி நின்ற மழைநீர் குழாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்தது. அவ்வாறு பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரை மர்மநபர்கள் கால்வாய் அமைத்து கொசஸ்தலை ஆற்றுக்குள் விட்டுள்ளனர். இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு மிக பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது.

உயர் கோபுரம் கீழே விழும் அபாயம்

இந்த பள்ளம் அனல் மின்நிலைய உயர்கோபுரத்திற்கு 10 அடி தூரத்தில் உள்ளது. மண் அரிப்பால் அனல் மின்நிலைய உயர்கோபுரம் கீழே விழும் அபாயம் உள்ளதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார்.

அப்போது பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் சுமதி, சோழவரம் ஒன்றிய ஆணையாளர் நர்மதா, வட்டாரவளர்ச்சி அலுவலர் குலசேகரன், மின்சாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்