தற்காலிக பாதையை துண்டித்து கரைபுரண்டு ஓடிய மழைநீரை வெளியேற்றும் பணி போக்குவரத்து பாதிப்பு

கொள்ளிடம் அருகே தற்காலிக பாதையை துண்டித்து புதுமண்ணியாற்றில் கரைபுரண்டு ஓடிய மழைநீரை வெளியேற்றும் பணி நடை பெற்றது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-11-07 22:45 GMT
கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையபாளையத்தில் கிட்டியணை வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக புதிதாக சிறிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சீர்காழி, சிதம்பரத்தில் இருந்து புத்தூர், மாதானம் வழியாக புதுப்பட்டினம், பழையாறுக்கு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையில் தற்போது வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் புதுமண்ணியாற்றில் அதிகளவு மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் புதுமண்ணியாற்றின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கண்ட இடத்துக்கு சென்று புதுமண்ணியாற்றின் வடிகாலாக இருந்துவரும் கிட்டியணை பாலம் அருகே உள்ள தற்காலிக பாதையை உடைத்து மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

உடைப்பு

இதனால் பாதை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் புத்தூரில் இருந்து பழையாறுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கம்பி பாலம், இருவக்கொல்லை வழியாக திருப்பிவிடப்பட்டது. மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆரப்பள்ளம் உப்பனாற்றின் இடதுகரையில் 5 இடங்களில் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி வெள்ளக் காடாக காட்சி அளித்தது. மேலும், கொள்ளிடம் அருகே கொடக்காரமூலை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மழைநீர் சூழந்து குளம்போல் காட்சி அளிக்கிறது. 

மேலும் செய்திகள்