நாகை மாவட்டத்தில் 9-வது நாளாக பலத்த மழை பள்ளிக்கு படகில் சென்ற மாணவ-மாணவிகள்

நாகை மாவட்டத்தில் 9-வது நாளாக நேற்று பலத்த மழை பெய்தது. வேதாரண்யம் அருகே உள்ள கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் படகில் பள்ளிக்கு சென்ற மாணவிகள், விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அந்த படகிலேயே விடு திரும்பினர்.

Update: 2017-11-07 23:00 GMT
நாகப்பட்டினம்,

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் மழை கொட்டி தீர்க்கிறது. நேற்றும் 9-வது நாளாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த மக்கள் பல்வேறு பணிகளை செய்ய தொடங்கினர். ஆனால் மதியம் 11.30 மணியளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இந்த மழை பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த தொடர் மழையின் காரணமாக நாகை நல்லியான்தோட்டம் பகுதியில் உள்ள வடிகால் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, கீழையூர், வண்டல், குண்டூரான்வெளி, வாய்மேடு, ஓரடியம்புலம், உம்பளச்சேரி, திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. தண்ணீர் புகுந்த குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் முகாம் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நாகை அருகே உள்ள வேதாரண்யம் பகுதியில் தொடர்மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை வண்டல் கிராமத்தில் இருந்து மாணவ-மாணவிகள் அவரிக்காட்டில் உள்ள பள்ளிக்கு படகில் சென்றனர். மழையின் காரணமாக பள்ளிகளுக்கு தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மீண்டும் அந்த படகிலேயேமாணவ- மாணவிகள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தலைஞாயிறில் 83.8 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக தரங்கம்பாடியில் 6 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:- திருப்பூண்டி 65.6, நாகை 42.1, மணல்மேடு 29, வேதாரண்யம் 22.2, கொள்ளிடம் 22, மயிலாடுதுறை 7 ஆகும். இதில் நாகை மாவட்டத்தில் மொத்தம் 298.3 மி.மீட்டரும், சராசரியாக 33.14 மி.மீட்டரும் மழை பதிவானது. 

மேலும் செய்திகள்