தாளவாடியில் ஜீப் மோதி மாணவி சாவு: காப்பக நிர்வாகிகள் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை
தாளவாடியில் ஜீப் மோதி மாணவி இறந்த வழக்கில் காப்பக நிர்வாகிகள் 2 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரம் லிங்காயத்தெருவை சேர்ந்தவர் மகாதேவசாமி. இவருடைய மகள் சந்தியா (வயது 15). அதே பகுதியை சேர்ந்தவர் மாதேவசாமியின் மகள் குஸ்மா (15). சந்தியாவும், குஸ்மாவும் தாளவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்தனர்.
தாளவாடி சூசையாபுரம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் டேவிட் (34). அதே பகுதியை சேர்ந்தவர் லூர்துசாமி என்கிற லூர்து (34). இவர்கள் 2 பேரும் சூசையாபுரம் பிரிவு பகுதியில் காப்பகம் வைத்து நடத்தி வருகின்றனர்.
கடந்த 7–1–2013 அன்று மாலையில் சந்தியாவும், குஸ்மாவும் அவர்கள் படிக்கும் பள்ளிக்கூட மைதானத்தில் டேவிட் ஜீப் ஓட்டி பழகினார். அவருக்கு அருகில் லூர்துசாமி அமர்ந்துகொண்டு ஜீப்பை ஓட்டுவதற்கு பயிற்சி கொடுத்தார். சந்தியாவும், குஸ்மாவும் மைதானத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்தனர்.
அப்போது டேவிட் ஓட்டி வந்த ஜீப் மாணவிகள் 2 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த குஸ்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டேவிட், லூர்துசாமி ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் டேவிட்டுக்கும், லூர்துசாமிக்கும் வாகனத்தை வேகமாக இயக்கிய குற்றத்திற்காக 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 1 மாதம் சிறை தண்டனையும், விபத்து மூலம் காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத்தண்டனையும், விபத்து மூலம் மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டு சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஏககாலத்தில் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்ததால் டேவிட், லூர்துசாமி ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார்.