5 ஆண்டுகளாக குற்றவாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை: ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

கடந்த 5 ஆண்டுகளாக குற்றவாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்காமல் நிலுவையில் உள்ள ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-11-07 23:30 GMT

மதுரை,

தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கே.என்.நேருவின் சகோதரருமான ராமஜெயம் கடந்த 2012–ம் ஆண்டு மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் கொலை குற்றவாளிகள் குறித்து எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று ராமஜெயத்தின் மனைவி லதா, மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2014–ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல்வேறு நீதிபதிகளிடம் இதுவரை 20 முறை விசாரணைக்கு வந்தது. அந்த நேரங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒவ்வொரு முறையும் விசாரணை தொடர்பாக ரகசிய அறிக்கையை தாக்கல் செய்து குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், விரைவில் கைது செய்துவிடுவோம், கொலை குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது என்று பல்வேறு காரணங்களை கூறி அவகாசம் பெற்றனர்.

இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 12 ரகசிய அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கின் இறுதி விசாரணையை முடித்த நீதிபதி பஷீர்அகமது, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த வழக்கின் தீர்ப்பை அவர் நேற்று பிறப்பிக்க இருந்தார்.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘இந்த வழக்கின் விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்றார்.

அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி பஷீர் அகமது ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.

அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்ததாவது:–

ஏற்கனவே பல முறை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், குற்றவாளிகள் கண்டறியப்பட வில்லை.

எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. போலீசார் பெற்றுக்கொண்டு, 3 மாதத்தில் விசாரித்து முடித்து அறிக்கையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்