நெல்லை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரம்: பாளை. பகுதிக்கு 45 டன் விதைநெல் வினியோகம்

நெல்லை மாவட்டத்தில் விவசாயி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாளையங்கோட்டை பகுதிக்கு 45 டன் விதை நெல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

Update: 2017-11-07 20:45 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் விவசாயி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாளையங்கோட்டை பகுதிக்கு 45 டன் விதை நெல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. அணைகளில் தண்ணீர் நிரம்பி வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் இந்த மாவட்டத்தில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் நெல் நாற்று பாவும் பணி, நடவு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, கடையம், ஆழ்வார்குறிச்சி, தென்காசி, கடையநல்லூர் பகுதிகளில் நடவு பணிகள் முடிவடைந்து கருநடவு திரும்பி வருகிறது. மேலும் குளத்து பாசனம், கிணற்று பாசன பகுதிகளிலும் நெல் நாற்று பாவும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

நெல் நாற்று பாவும் பணி

நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய்களில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சுத்தமல்லி, கோபாலசமுத்திரம், பேட்டை, மேலப்பாளையம், கருங்குளம், சிவந்திப்பட்டி, மேலப்பாட்டம் மற்றும் பாளையங்கோட்டை பறநகர் பகுதிகளில் தற்போது நெல் நாற்று பாவும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சில இடங்களில் விவசாயிகள் வயலை உழுது நாற்று பாவி வருகிறார்கள். சில இடங்களில் நாற்று பாவி 10 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் நாற்றுகள் வளர்ந்து பச்சைப்பசேலென காட்சி அளிக்கிறது.

குறுகிய கால நெற்பயிரான கோவை–51 ரக நெல்லை விவசாயிகள் விரும்பி நாற்று பாவுகிறார்கள். இதனால் இந்த ரக நெல் விதைகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க விவசாயத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

45 டன் விதைநெல் வினியோகம்

பாளையங்கோட்டை பகுதி விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குவதற்காக மேலநீலிதநல்லூர் பகுதியில் இருந்து கோவை–51 ரக நெல் விதை 45 டன் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த விதை நெல்கள் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வேளாண்மை அதிகாரி ஒருவர் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. தேவையான அளவு நெல் விதைகள், உரங்கள், பூச்சிமருந்து இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. உரக்கடைகளில் உரங்கள் மற்றும் இருப்பு உள்ள பொருட்களின் விவரத்தை பட்டியல் வைக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்