தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறித்த வாலிபர் கைது

கோவையில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் திருடிய மோட்டார் சைக்கிளை விற்க சென்றபோது போலீசாரிடம் சிக்கினார்.

Update: 2017-11-07 22:30 GMT

கோவை,

கோவை ராமநாதபுரம், பீளமேடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு சம்பவங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதனால் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன.

இதில் ஈடுபடும் மர்ம ஆசாமியை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், துணை கமி‌ஷனர் பெருமாள், உதவி கமி‌ஷனர் சோமசுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில், ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்–இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், இருதயசாமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் கோவையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை கோவை பங்கஜாமில் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதைதொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த அன்வர் என்பவருடைய மகன் ஆஷிக் அகமது (வயது 24) என்பதும், இவர் பீளமேடு, ராமநாதபுரம் மற்றும் போத்தனூர் ஆகிய பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த 6 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடியதும், போத்தனூர் கணேசபுரம் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைபறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஆஷிக் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஆஷிக் அகமது அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

ராமநாதபுரம், பீளமேடு மற்றும் போத்தனூர் ஆகிய பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் 12½ பவுன் நகைகளை பறித்துள்ளேன். இதுதவிர அந்த பகுதிகளில் பொதுமக்கள் கூடும் பகுதி மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த 6 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடினேன்.

அதில் ஒரு மோட்டார் சைக்கிளை விற்பனைக்காக எடுத்து சென்றபோது போலீசார் என்னை பிடித்தனர்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

அவரிடம் இருந்து 12½ பவுன் நகை மற்றும் 6 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோவை 6–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–

தனியாக நடந்து செல்லும் பெண்கள், தங்கள் பின்னால் யாரேனும் வருகிறார்களா? என்பது குறித்து பார்த்துக்கொண்டே செல்லவேண்டும். மேலும் அவர்கள் அணிந்து இருக்கும் நகைகளை துணியால் மறைத்து வைத்து செல்ல வேண்டும்.

மோட்டார் சைக்கிள்களை சாலையோரம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விட்டு செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் மோட்டார் சைக்கிளில் ஜி.பி.ஆர்.எஸ். என்ற நவீன கருவியை பொருத்த வேண்டும். பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டால் அது எங்கு உள்ளது? என்பதை அந்த கருவி மூலம் தெரிந்துகொள்ளலாம். உடனே போலீசாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபரிடம் சென்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய அது உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்