நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி வசூலித்த 35 பேர் மீது வழக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி வசூலித்த 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி வசூலித்த 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புகார் மையம்நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி வசூலித்தல் தொடர்பான புகார்களை அளிக்க கடந்த மாதம் (அக்டோபர்) 24–ந் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தில் அதற்காக பிரத்யேக புகார் மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதுதொடர்பாக புகார் தெரிவிக்க 96297 11194 என்ற செல்போன் எண் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செல்போன் எண்ணில் வருகிற புகார் மனுக்கள், சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள துணை தாசில்தாருக்கும், காவல்துறைக்கும் உடனடியாக விசாரணைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு வருகிற புகார் மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுத்து முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் அவ்வாறு பெறப்படும் கந்துவட்டி தொடர்பான மனுக்கள் மீது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல்துறை மற்றும் வருவாய் துறையினருடன் ஆலோசனை நடத்தி மனு மீதான நடவடிக்கை முடிவு செய்யப்படுகிறது.
35 வழக்குகள்இந்த சிறப்பு முறையின்கீழ் கடந்த மாதம் 24–ந் தேதி முதல் கடந்த 4–ந் தேதி (சனிக்கிழமை) வரை கந்துவட்டி தொடர்பாக 95 புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளன. இதில் உண்மையான புகார்கள் என அறியப்பட்டவைகள் மீது மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களில் 56 புகார் மனுக்கள் வந்துள்ளன. இதில் அதீதிய வட்டி வசூல் செய்யப்பட்ட புகார்கள் மனுக்கள் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே கந்து வட்டி வசூல் செய்யப்பட்டு வருகிறது என்ற புகார்கள் வந்தவுடன் இரு முனைகளிலும் விசாரணை செய்து அவை உண்மை என்று அறியப்பட்டவுடன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் கந்துவட்டி வசூல் செய்யப்படுவர்கள் குறித்து அச்சப்பட வேண்டாம். கந்து வட்டி வசூல் செய்யப்படுவர்கள் மீது சட்டப்படியான கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்வட்டிக்கு பணம் கொடுக்கிறவர்கள் கண்டிப்பாக வட்டிக்கு பணம் கொடுப்போர் சட்டத்தின்கீழ் உடனே பதிவு செய்து தாசில்தாரிடம் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த உரிமத்தை ஒரு வாரத்திற்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.