மூங்கில்துறைப்பட்டு அருகே கூலித்தொழிலாளி, வி‌ஷம் குடித்து தற்கொலை

மூங்கில்துறைப்பட்டு அருகே மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விரக்தியடைந்த கூலித்தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-11-07 22:00 GMT

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சவேரியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் அலெக்சாண்டர்(வயது 26). கூலித்தொழிலாளியான இவரும் பழையனூரை சேர்ந்த அஞ்சலி(24) என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான அலெக்சாண்டர் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது

இந்தநிலையில் சம்பவத்தன்று அலெக்சாண்டர் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதையறிந்த அஞ்சலி ஏன் குடித்து விட்டு, வேலைக்கு செல்லாமல் இருக்கிறீர்கள்? என கேட்டுள்ளார். இதனால் கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அஞ்சலி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த அலெக்சாண்டர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று காலை அலெக்சாண்டர் உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்