மானியத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி 2¾ லட்சம் மோசடி செய்த வழக்கில் கணவன்–மனைவி கைது
மானிய உதவியுடன் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 73 ஆயிரம் மோசடி செய்த வழக்கில் கணவன்–மனைவி கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த கட்டதேவன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி பாண்டிசெல்வி. இவர் கடந்த 2015–ம் ஆண்டு மானாமதுரையை அடுத்த கேப்பனூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது பாண்டிசெல்வியின் உறவினரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரேம்குமார் மற்றும் அவருடைய தாயார் செல்வி, மனைவி சுபாதேவி உள்பட 4 பேர் பாண்டிசெல்வியிடம் தாட்கோ அலுவலகத்தின் மூலம் மானிய உதவியுடன் கடன் பெற்று தருவதாகவும், ரூ.18 லட்சம் கடன் பெற்றால் ரூ.7 லட்சம் மானிமாக கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த கடனை வாங்கி தருவதற்காக ரூ.3 லட்சம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய பாண்டிசெல்வி ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்தை பிரேம்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுகொண்ட 4 பேரும், தாங்கள் கூறியப்படி கடன் தொகையை பெற்றுதராமல் மோசடி செய்துவிட்டனர்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் பாண்டிசெல்வி புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் சிவகங்கை போலீசார், பிரேம்குமார், இவரது மனைவி சுபாதேவி, தாயார் செல்வி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் பிரேம்குமார் தாயார் செல்வியை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த பிரேம்குமார் மற்றும் அவரது மனைவி சுபாதேவியை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம், ஏட்டுக்கள் திருமுருகன், ராஜேஸ்வரி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் கைது செய்தனர்.