திருப்பத்தூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டால் காணாமல் போகும் நீர் ஆதாரங்கள்

திருப்பத்தூர் பகுதியில் ஆறு, கண்மாய், ஊருணிகள் என நீர் ஆதாரங்களில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருவதால், அவை பாழ்பட்டு வருகின்றன.

Update: 2017-11-07 12:30 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பகுதிகளில் மணிமுத்தாறு, விருசுழியாறு, பாலாறு போன்றவை முக்கிய நீராதாரமாக உள்ளன. இதுபோக திருப்பத்தூர் பெரிய கண்மாய், தம்பிபட்டி கண்மாய் என முக்கிய கண்மாய், ஊருணிகளும் உள்ளன. இந்த நீராதாரங்களில் தண்ணீர் நிரம்பி சில ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் வந்தது. அத்துடன் இப்பகுதியில் உள்ள கண்மாய், ஊருணிகள் நிரம்பி வழிந்தன. அதன்பின்னர் போதிய மழை பெய்யாததால் தற்போது ஆறுகளும், கண்மாய்களும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் அவற்றை நம்பியுள்ள 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக காணப்படுகின்றன. தண்ணீர் வரத்து இல்லை என்பது விவசாயிகளை ஒருபுறம் கவலையடைய செய்தாலும், மறுபுறம் ஆறு, கண்மாய், ஊருணிகளில் நடைபெறும் மணல் திருட்டு மிகவும் வேதனையடைய செய்துள்ளது.

மணல் தட்டுப்பாடு காரணமாக இந்த ஆறுகளில் ஆங்காங்கே மாட்டுவண்டிகள், டிராக்டர்களில் மணல் திருட்டு நடந்து வந்தது. தற்போது மணல் விலை உச்சத்தை எட்டி வருவதால் பெரிய அளவில் மணல் திருட்டு நடந்து வருகிறது. ஆறுகளின் ஓரத்தில் உள்ள பல்வேறு பட்டா நில உரிமையாளர்கள் மணல் விற்பனை நோக்கத்தோடு ஆற்றின் அருகேயுள்ள தங்களது நிலத்திற்குள் ஆற்றுநீர் வரவழைத்து அதன் மூலம் மணலை சேகரித்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் ஒன்றியம் மகிபாலன்பட்டி அருகே கோவிலாப்பட்டியில் விருச்சுழி ஆற்றில் அதிக அளவு மணல் திருடிய திருப்பத்தூர் லாரியையும், கண்டவராயன்பட்டி ஜே.சி.பி. எந்திரத்தையும் அதிகாரிகள் பிடித்தனர். தொடர்ந்து திருப்பத்தூர் அருகே மாங்குடி பகுதியில் பட்டா நிலத்தில் அரசு அனுமதி பெறாமல் மணல் திருடி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் திருப்பத்தூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் திடீர் சோதனையிட்டனர். அப்போது திருவுடையார்பட்டி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை மடக்கிப்பிடித்தனர். மேலும் அதனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து, லாரி, ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் திருட்டு மணல் அள்ள பயன்படுத்திய வாகனங்கள் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதனையடுத்து அவர் போலீஸ் உயர் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு, தனது பெயர் வழக்கில் சேர்க்காமல் இருக்க கவனித்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் பிடித்த வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல்,

வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்து ஓட்டுனர்கள் மீது மட்டும் பெயரளவில் வழக்குப்பதிவு செய்தனர். இதுபோன்று தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர். அரசுத்துறை அதிகாரிகளே சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதால் இயற்கை வளங்கள் அழிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 தினங்களில் மட்டும் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அனுமதியின்றி மணல் அள்ளியதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று திருப்பத்தூர் பகுதியில் தொடர் மணல் திருட்டு நடப்பதால் இப்பகுதியின் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன. எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்று மணல் திருட்டு நடக்காமல் இருக்க, மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இல்லையென்றால் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஆறு, கண்மாய் என அனைத்து நீராதாரங்கள் இருந்ததற்கான தடயங்கள் இல்லாமல் காணாமல் போய்விடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் பட்டா நிலங்களில் மணல் திருடினால் நிலத்தின் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்