பனாமா, போபர்ஸ் பீரங்கி ஊழல் புகார் ‘விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன்’ நடிகர் அமிதாப்பச்சன் அறிக்கை
பனாமா, போபர்ஸ் பீரங்கி ஊழல் புகா விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், வாழ்வின் எஞ்சிய நாட்களை தனிமையில் கழிக்க விரும்புவதாகவும் நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
பனாமா கேட் எனப்படும் பனமா ஆவண ஊழல் மற்றும் போபர்ஸ் பீரங்கி ஊழல் ஆகியவற்றில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மீது குற்றச்சாட்டு நிலவுகிறது. மேலும், மும்பையில் அமைந்துள்ள அவரது வீட்டில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக கட்டிடம் கட்டப்பட்டதாகவும் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாநகராட்சி தரப்பில் அமிதாப்பச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தநிலையில், 75 வயது நடிகர் அமிதாப்பச்சன் சமூக வலைதளத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-
அமைதி தேடுகிறேன்
இந்த வயதிலும், இந்த நேரத்திலும், அமைதியையும், புகழ் வெளிச்சத்தில் இருந்து விடுதலையையும் நான் தேடுகிறேன். என் வாழ்வின் எஞ்சிய சில ஆண்டுகளை எனக்குள், தனிமையில் கழிக்க விரும்புகிறேன். மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் என்னுடைய வக்கீல் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு விட்டார்.
சமீப நாட்களாக, பனாமா விவகாரத்தில் என்னுடைய பெயர் மீண்டும் அடிபடுவதை நான் காண்கிறேன். அதற்கு என்னுடைய பதிலையும் கேட்டிருந்தார்கள். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தும், என் பெயர் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதை விளக்கியும் ஏற்கனவே இரண்டு முறை உடனடி பதில் அளித்தேன்.
விசாரணைக்கு ஒத்துழைப்பு
இதனை பெற்றுக்கொண்ட ‘சிஸ்டம்’, எனக்கு 6 முறை சம்மன் அனுப்பியது. ஒவ்வொரு சம்மனுக்கும் ஊக்கமாகவும், கடமை உணர்வோடும், முறையாகவும் பதில் அளித்தேன். அதோடு, மும்பை மற்றும் டெல்லியில் வருமான வரித்துறை, அமலாக்க பிரிவு அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தேன்.
இந்த விவகாரம் 25 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்தது என்பதால், சில கேள்விகளுக்கு பதிலளிக்க சற்று கால தாமதம் ஆனது. ஒவ்வொரு தடவையும், கடமைதவறாத குடிமகனாக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து இருக்கிறேன். இதற்கு பிறகும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்றால், அதற்கும் உடன்படுவேன். அது தான் நெறிமுறை.
இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.