காரில் பின்தொடர்ந்து சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது
காரில் பின்தொடர்ந்து சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.
மும்பை,
மும்பை அந்தேரி மேற்கு, யாரி ரோடு பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் லோகண்ட்வாலா சர்க்கிள் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது பின்னால் கார் ஒன்று வந்தது. காரில் வந்தவர்கள் ஹாரன் அடித்து கொண்டே இருந்தனர். எனவே இளம்பெண், கார் செல்ல வழிவிட்டார். எனினும் காரில் வந்தவர்கள் முந்தி செல்லவில்லை.
இந்தநிலையில் கார் இளம்பெண் அருகே வந்தபோது, அதில் இருந்த ஒருவர் ஜன்னல் வழியாக இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசினார். மேலும் அவர்கள் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்றனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் அந்த வழியில் இருந்த ஒரு ஓட்டல் அருகே மக்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களிடம், இளம்பெண் காரில் பின்தொடர்ந்து வருபவர்கள் பற்றி பதற்றத்துடன் கூறினார். உடனடியாக பொதுமக்கள் காரை நிறுத்தி அதில் இருந்த 2 பேரை பிடித்தனர். ஒருவர் காரில் இருந்து இறங்கி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்கள் பிடித்து வைத்து இருந்த 2 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் வெர்சோவா பகுதியை சேர்ந்த அவினாஷ்(வயது27), சுரேஷ்(45) என்பது தெரியவந்தது. தப்பிஓடியவர் மிலிந்த் பாட்டீல் என்பவர் ஆவார். போலீசார் 3 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவரை வலைவீசி தேடிவருகின்றனர்.