உரம் தயாரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் புதுத்தெருவில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-06 23:00 GMT
ஸ்ரீரங்கம்,

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 26 சென்ட் நிலம் உள்ளது. இங்கு தீயணைப்பு நிலையம், அங்கன்வாடி, ரேஷன் கடை ஆகியவை உள்ளன. மேலும் இந்த இடத்தை அப்பகுதி சிறுவர்கள் விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கம் 5-வது வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டி தரம் பிரித்து உரம் தயாரிக்க ஏதுவாக இந்த 26 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் ஞானவேல் நிகாதீபன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் அதிகாரிகள் கடந்த 31-ந் தேதி ஆய்வு செய்தனர்.

இதற்கு அப்பகுதி மக்களும், தீயணைப்பு துறையினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உயரதிகாரிகள் தலைமையில் இப்பகுதியினருடன் கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் முடிவெடுக்கப்படும் எனக்கூறிவிட்டு சென்றனர்.இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் ஞானவேல் நிகாதீபன், இளநிலை செயற்பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் அப்பகுதிக்கு 2 பொக்லைன் எந்திரத்துடன் சென்று இடத்தை அளந்து பணியை தொடங்க முயன்றனர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொக்லைன் எந்திரங்கள் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாநகர பொறியாளர் அமுதவள்ளி அப்பகுதி பொதுமக்களிடம் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திற்கு வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணலாம் என கூறினார்.

இதையடுத்து ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலக கூட்டரங்கில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்பு இல்லாத 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் குப்பைகளை உரமாக்கும் கூடத்தை அமைக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

பொதுமக்கள் குறிப்பிட்ட 5 இடங்களை ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும். அதுவரை இங்கு குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் மையம் கட்டுவதில்லை என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் நிர்வாக பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், சுகாதார அலுவலர் கூரத்தாழ்வார், இளநிலை பொறியாளர் பாலமுருகன், ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்