உடலில் மின்சாரத்தை பாய்ச்சி டிப்ளமோ படித்தவர் தற்கொலை போலீசார் விசாரணை

மோகனூர் அருகே, உடலில் மின்சாரத்தை பாய்ச்சி டிப்ளமோ படித்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் நீலத்திமிங்கலம் விளையாட்டில் ஈடுபட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-11-06 23:00 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் தேவராஜன், இறந்து விட்டார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், மோகன்ராஜ் (வயது 24) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். மோகன்ராஜ் டிப்ளமோவில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்துள்ளார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மோகன்ராஜ், தாய் தனலட்சுமியிடம் தொழில் செய்வதற்காக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். அதற்கு அவர், மகளின் திருமணம் முடிந்ததும் தொழில் தொடங்கலாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் மோகன்ராஜ் மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று காலை தனலட்சுமியும், அவருடைய மகளும் வெளியில் சென்றிருந்தனர். மோகன்ராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வெளியில் சென்றிருந்த தனலட்சுமி வீடு திரும்பியபோது, வீடு பூட்டப்பட்டு சாவி வெளியே கிடந்தது. வீட்டுக்குள் கருகிய நாற்றம் அடித்தது.

அதிர்ச்சியடைந்த அவர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மோகன்ராஜ், கைகள், கழுத்து மற்றும் நெற்றிப்பகுதியில் மின்சார வயரை சுற்றிக்கொண்டு “பிளக்ஸ் பாயிண்டில்“ வயரை சொருகி உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தனலட்சுமி மோகனூர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட மோகன்ராஜ் நீலத்திமிங்கலம் விளையாட்டில் ஈடுபட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அவருடைய செல்போனையும் ஆய்வு செய்து வருகின்றனர். உடலில் மின்சாரத்தை பாய்ச்சி டிப்ளமோ படித்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்